சென்னையில் இருந்து விண்வெளி மையத்தை காணலாம்..எப்போது தெரியுமா?


சென்னையில் இருந்து விண்வெளி மையத்தை காணலாம்..எப்போது தெரியுமா?
x
தினத்தந்தி 10 May 2024 3:37 PM IST (Updated: 10 May 2024 5:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்கலாம் என்று நாசா அறிவித்துள்ளது.

சென்னை,

விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும். இது சீரான வேகம் மற்றும் திசையுடன் பூமியைச் சுற்றி வருகிறது. விண்வெளி வீரர்கள் வாழவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் கூடிய இடமாக இது செயல்படுகிறது.

இதெல்லாம் நம் கண்களால் காண்போமா என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் நாசா சார்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும் என்று இதனை வெறும் கண்களால் சென்னையில் இருந்து காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாசமாக இருப்பதால் மக்கள் இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது நட்சத்திரம் போலவும் காட்சியளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை பெரியார் அறிவியல் மையம் போன்ற இடங்களில் இதனை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமல்லாமல் அறிவியல் மாணவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் இதனை காண ஆர்வமுடன் உள்ளனர். பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணில் சுற்றி வருவதை காண மக்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் நகர்ந்துகொண்டிருக்கும் சிறிய ஒளிப் புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை மனிதர்களால் வெறும் கண்களால் பார்க்க முடியும். இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்றிரவு பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது.


Next Story