சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை..!
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் உள்ளிட்ட 6 தொழிற்சாலைகள் வடசென்னையை மாசுப்படுத்துகின்றன என்று கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஜூலை 20-ந் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்தது. அதில் 18 நிபந்தனைகள் விதித்து இருந்தது. 18-வது நிபந்தனையில், இந்த 6 நிறுவனங்களும் தாங்கள் ஒரு ஆண்டு கையாளும் வணிக தொகையில் ஒரு சதவீதத்தை ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்ய வேண்டும். மணலி பகுதியில் ஏதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், இந்த தொகையை பயன்படுத்தி அதைச் சரிசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆண்டு வணிகம்
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.நிஷாபானு, என்.மாலா ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அப்துல் சலீம் ஆஜராகி தன் வாதத்தில் கூறியதாவது:-
மனுதாரர் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வணிகம் செய்கிறது. இதில் வருவாய் என்று பார்த்தால் வெறும் 100 கோடி ரூபாய்தான் இருக்கும். பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், மொத்த வணிகத்தொகையில் ஒரு சதவீதத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
இடைக்கால தடை
அப்படி என்றால், ஆண்டுக்கு ரூ.500 கோடி டெபாசிட் செய்ய வேண்டும். இந்த தொகை வருமானத்தைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. அதனால், தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.