வருகிற 13-ந்தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்


வருகிற 13-ந்தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
x

வருகிற 13-ந்தேதி பள்ளிகள் திறப்பதையொட்டி தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது

தேனி

இலவச பாடப்புத்தகங்கள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 1½ லட்சம் மாணவ, மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. அவை தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் கல்வி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. அதன்படி தேனி கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்கள் தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டன.

768 பள்ளிகள்

பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் இருந்து அந்தந்த கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி நேற்று மாலை தொடங்கியது. தொடர்ந்து இந்த பணிகள் இன்றும் (சனிக்கிழமை) நடக்கிறது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை 432 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 96 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 199 அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 41 அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மொத்தம் 768 உள்ளன.

இந்த பள்ளிகள் அனைத்திலும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கும் போது மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story