தங்கம் கடத்தல் வழக்கில் 36 ேபர் பட்டியல் தயாரித்து தீவிர கண்காணிப்பு


தங்கம் கடத்தல் வழக்கில் 36 ேபர் பட்டியல் தயாரித்து தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 2:41 PM IST)
t-max-icont-min-icon

தங்கம் கடத்தல் தொடர்பாக 36 பேரின் பட்டியல் தயாரித்து மாவட்ட காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

ராமநாதபுரம்

தங்கம் கடத்தல் தொடர்பாக 36 பேரின் பட்டியல் தயாரித்து மாவட்ட காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது என போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறினார்.

தங்கம் கடத்தல்

இந்தியாவில் தங்கம் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் உரிய கணக்கு காட்டி தங்கம் வாங்கி விற்பனை செய்வதற்கு பதிலாக கடத்தல் மூலம் தங்கத்தை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் தங்கத்தை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்து வருவதோடு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு கடத்தல் மூலம் தங்கத்தை கொண்டு வருவதற்கு இந்திய நாட்டிற்கே வழித்தடமாக அமைந்துள்ளது தமிழகம்தான். குறிப்பாக இலங்கையின் வெகு அருகில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதிதான்.

இலங்கையில் தங்கத்திற்கு இறக்குமதி வரிகிடையாது என்பதால் வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை வாங்கி வந்து இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அதிக லாபம் கிடைப்பதால் இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதி வழியாக தங்கம் கிலோ கணக்கில் கடத்தி வரப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

தடுக்க வேண்டிய கட்டாயம்

கடந்த சில நாட்களில் மட்டும் பல கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலில் வீசப்படும் தங்கத்தை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மூலம் தேடிப்பிடித்து அதிகாரிகள் கைப்பற்றி செல்கின்றனர். இவ்வாறு கைப்பற்றப்படும் தங்கம் அதிகளவில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கணக்கில் காட்டப்படுவது குறைந்த அளவே என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் அதிகாரிகளுக்கு தெரிந்தும், தெரியாமலும் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்படுவதற்கு ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு வாயிலாகவே உள்ளது.

இவ்வாறு கடத்தி வரப்படும் தங்கத்தை பிடிக்கவோ, அதனை தடுக்கவோ தீவிரமான உறுதியான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் மீனவர்கள் போர்வையில் படகுகளில் தங்கத்தை கடத்தி வருகின்றனர். எங்களை பார்த்ததும் கடலில் வீசி விடுகின்றனர் என்று கூறி வருகின்றனர். அதிக கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

36 பேர் பட்டியல்

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் கேட்டபோது கூறியதாவது:- கடல் வழியாக கடத்தி வரப்படும் தங்கத்தினை சம்பந்தப்பட்ட துறையினர் தகவல் தெரிந்து கைப்பற்றி வருகின்றனர். இருப்பினும் தரைவழியாக தங்கம் கடத்தி செல்லப்படுவதை தடுக்கவும், இங்கிருந்து போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தி செல்லப்படாமல் தடுக்கவும் மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். சமீபத்தில் பிடிப்பட்ட தங்கம் தொடர்பாக கைதானவர்கள் கடத்தலுக்கு புதியவர்களாக உள்ளனர்.

ஏனெனில் மாவட்ட காவல்துறையின் சார்பில் தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 36 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களில் சமீபத்திய கடத்தல்காரர்கள் யாரும் இல்லை. எனவே, சிக்கிவிடக்கூடாது என்று கருதி புதியவர்களை பணத்தாசை காட்டி கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்க மாற்று வழிமூலம் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு கூறினார்.


Next Story