நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரம்
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் இடிபாடுகளில் சிக்கி நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 30), இளையநயினார்குளத்தைச் சேர்ந்த செல்வம் (27), ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் (23) ஆகிய 3 பேர் பலியானார்கள். விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளத்தை சேர்ந்த விஜய் (27) ஆகியோர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான நெல்லை தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பவரை தேடும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து, அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட உள்ளனர். ஆனால் அடிக்கடி லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையே மீட்பு பணிகளை நேற்று காலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய ராஜேந்திரனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் பார்க்கும்போது சுமார் 100 டன் எடையுள்ள பாறைகளுக்கு அடியில் ராஜேந்திரன் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன் பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.