சேனாதிபதிபாளையத்தில் ஓடை தூர்வாரும் பணி தீவிரம்
ஓடை தூர்வாரும் பணி தீவிரம்
ஈரோடு ரங்கம்பாளையம் அருகே உள்ள சேனாதிபதிபாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் ஓடை செல்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்ததால் செடி கொடிகள் வளர்த்து ஓடை புதர்மண்டி காணப்பட்டது. இதன் காரணமாக தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது. மேலும் மழைக்காலங்களில் கழிவு நீருடன், மழைநீரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஓடையை தூர்வார வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று மாநகராட்சி சார்பில் நேற்று முதல் ஓடை தூர்வாரும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையில் படர்ந்திருக்கும் மரம், செடி கொடிகள் அகற்றப்பட்டு வருகிறது. இதனால் ஓடை தண்ணீரில் இருந்த மீன்கள் மேலே வந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மீன்களை உற்சாகத்துடன் பிடித்து வீட்டிற்கு எடுத்து சென்றனர்.