கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்


கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
x

கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலங்களில் உள்ள சிலைகளுக்கும் வர்ணம் பூசப்படுகிறது.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

கல்லணை கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாலங்களில் உள்ள சிலைகளுக்கும் வர்ணம் பூசப்படுகிறது.

கல்லணை

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை காவிரி டெல்டா பாசனத்திற்காக பகிர்ந்தளிக்கும் இடமாக விளங்குவது கல்லணை. கல்லணையிலிருந்து தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களை வளப்படுத்தும் புதிய ஆறாக விளங்குவது கல்லணை கால்வாய் எனப்படும் புதுஆறு. கல்லணைகால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மிக விரைவில் கடைமடைக்கு சென்று சேர்ந்து குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ள வசதியாக ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் ரூ.2,639 கோடி மதிப்பீட்டில் திறன்மிக்க நீர்மேலாண்மை பணிகளை செய்ய திட்டமிட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சாய்வு தளங்கள்

கல்லணை தொடங்கி கடைமடை வரை பணிகள் செய்வதற்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டு, இந்த பணிகளை கடந்த 14.2.2021-ல் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இதையடுத்து 1,714 மதகுகள் திரும்ப கட்டுதல், 29 மதகுகள் சீரமைத்தல், 26 கால்வாய் பாலம் திரும்ப கட்டுதல், 16 கால்வாய் பாலம் சீரமைத்தல், 28 நீரொழுங்கிகள் திரும்ப கட்டுதல், புதிதாக ஒரு நீரொழுங்கிகட்டுதல், 108 கீழ்குமிழி அமைப்பு திரும்ப கட்டும் பணி, கல்லணைகால்வாய் நெடுக படுக்கை தளங்களை கான்கிரீட் தளங்களாக மாற்றுதல், சாய்வு தளங்களை கான்கிரீட் தளங்களாக அமைத்தல், 403 ஏரிகள் புனரமைப்பு பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின.

சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் கடந்த ஜூன் 16-ல் கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் உடனடியாக நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 28-ல் மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதத்தில் இருந்து கல்லணை கால்வாயில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கல்லணையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும், கீழ்பாலங்கள் சீரமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் கல்லணை கால்வாய் கரையில் சாய்வுதளம் முழுவதுமாக நவீன எந்திரங்கள் மூலம் அமைக்கப்படும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் மே மாத இறுதியில் முடித்து கொள்ளும் வகையில் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன. இதேபோல் கல்லணை பாலங்களில் உள்ள சிலைகளுக்கு புது வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


Next Story