குறுவை நெல் அறுவடை பணி தீவிரம்
மணல்மேடு பகுதியில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மணல்மேடு:
மணல்மேடு பகுதியில் குறுவை நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அறுவடை பணி
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணி நடைபெற்று வருகிறது. மணல்மேடு, கிழாய், வில்லியநல்லூர், கொண்டல், முடிகண்டநல்லூர், பட்டவர்த்தி, தலைஞாயிறு என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 சதவீத அறுவடை பணி நடைபெற்று வருகிறது. ஆடுதுறை 45 என்ற சன்னரகம் அமோக விளைச்சல் தந்துள்ளது. மணல்மேடு கிழாய் பகுதியில் அறுவடை எந்திரம் மூலம் நெல் அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது.
கொள்முதல் நிலையங்கள்
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மணல்மேடு பகுதியில் குறுவை அறுவடை பணி எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளதால் எந்திரம் மூலம் அறுவடை செய்யப்படுகிறது. எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 வாடகை செலுத்தி அறுவடை பணியில் ஈடுபட்டு வருகிறோம்.பயிர்கள் சாய்ந்து விழாமல் இருந்தால் 1 மணி நேரத்தில் ஒரு ஏக்கர் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியும். ஆனால் பயிர்கள் சாய்ந்துள்ளதால் அறுவடை செய்ய 1 மணி நேரத்திற்கும் மேலாகிறது.விரைவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க இருப்பதால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் சேமித்து வருகின்றனர்.