எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரம்


எந்திரம் மூலம் நெல் அறுவடை தீவிரம்
x

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாதி விளைச்சல் உள்ள நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாதி விளைச்சல் உள்ள நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

நெல் விவசாயம் பாதிப்பு

கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சுற்றி உள்ள சோழந்தூர், கழனிக்குடி, நாரல், மங்கலம், ஆனந்தூர், வெண்ணத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர்.

கடந்த 3 மாதங்களாக முழுமையாக மழையே பெய்யாததால் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோழந்தூர், வடவயல், வெண்ணத்தூர், உள்ளிட்ட பல கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய் கிடக்கின்றன. ஓரளவு காய்ந்த பாதி விளைச்சலும் இல்லாமல் உள்ள நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகின்றது.

அறுவடை தீவிரம்

இது குறித்து வடவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரசிங்கம் கூறும் போது:-

கடந்த 2 ஆண்டுகளாகவே ஆர்.எஸ் மங்கலம் பகுதியை சுற்றி அதிக அளவில் மழை பெய்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தன. தண்ணீரில் இறங்கிதான் நெற் பயிர்களை அறுவடை செய்தோம். ஆனால் தற்போது மழையே பெய்யாததால் சோழந்தூர், வடவயல், முள்ளுக்குடி, சிங்கனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி போய்விட்டன. வடவயல் உள்ளிட்ட ஒரு சில கிராமங்களில் ஒரு சில விவசாய நிலங்களில் மட்டும் தான் நெற் பயிர்கள் பாதி விளைந்தும் விளையாமல் உள்ளது. தற்போது எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகின்றது .ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்ததோடு மட்டுமில்லாமல் விளைச்சலே இல்லாத சாவியாக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 என வாடகை கொடுத்து வருகிறோம். மழை பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் கருகிப்போன நெற்பயிர் விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக பயிர் காப்பீட்டுநிவாரணத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story