இன்ஸ்டாகிராம் பழக்கம்: விடுதிக்கு அழைத்துச் சென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - மாணவன் கைது


இன்ஸ்டாகிராம் பழக்கம்: விடுதிக்கு அழைத்துச் சென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - மாணவன் கைது
x
தினத்தந்தி 13 May 2024 6:33 AM IST (Updated: 13 May 2024 12:39 PM IST)
t-max-icont-min-icon

மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்துக்குரிய வகையில் இளம் ஜோடிகள் தங்கியிருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது 3 அறைகளில் இளம்ஜோடிகள் தனிமையில் இருந்தனர்.

இதில் ஒரு ஜோடி 17 வயது நிரம்பியவர்கள் என்பதும் இருவருமே பிளஸ்-1 படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. பின்னர் மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு அந்த மாணவி ஒப்படைக்கப்பட்டார். மற்ற 2 ஜோடிகளையும் எச்சரித்து அனுப்பினர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், விடுதியில் சிக்கிய மாணவன், மாணவி இருவரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள். இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது.

இந்தநிலையில் நண்பர்களுடன் கன்னியாகுமரி வந்த இவர்கள் கடலில் குளித்து விட்டு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் விடுதியில் தங்கியுள்ளனர். தனிமையில் இருந்த மாணவியிடம், மாணவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவி அளித்த புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவன் மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தனர். மேலும் இளம்சிறார், சிறுமிக்கு அறை ஒதுக்கீடு செய்ததாக சம்பந்தப்பட்ட விடுதி உரிமையாளர், மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story