கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு; வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை.
சென்னை,
ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கும் முன்பு பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை அயனாவரம், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை அலுவலகங்களுக்குட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பிராட்வே கேப்ரியல் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கான வசதிகள் சரியாக இருக்கிறதா? என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்வி அதிகாரி ராஜாசேகரன், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஸ்ரீதரன், மாதவன், வெங்கடேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குணசேகரன், ஞானவேல், பொன்னுசாமி மற்றும் தீயணைப்பு, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை முகாம் நடந்தது. மேலும் மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் தீ விபத்து தடுப்பு வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் 25 பள்ளிகளை சேர்ந்த 55 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. குறைபாடுகள் கண்டறியப்பட்ட 2 வாகனங்களில் குறைகள் சரிசெய்யப்பட்டு மறு ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது.