பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் ஆய்வு; அதிகாரிகள் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்


பரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் ஆய்வு; அதிகாரிகள் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
x

அதிகாரிகள் குழுவினர் பரந்தூர் விமான நிலையத்தில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம்

பசுமை வெளி விமான நிலையம்

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர், வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார் பாக்கம், குணகரம்பாக்கம், அக்கம்மாபுரம் உள்ளிட்ட 13 கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்து ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலங்கள், குடியிருப்பு வீடுகள் என முழுவதும் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள் 432-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசு விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவை நியமித்துள்ளது.

சாலை மறியல்

தமிழக அரசு நியமித்துள்ள குழுவினர் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்ய வந்தபோது அதிகாரிகள் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு, ஆய்வுக்குழுவினரை தடுத்து நிறுத்த போலீசாரின் தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது கட்டமாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட முடிவு செய்தனர். இதையறிந்த ஏகனாபுரம் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே பரந்தூர்- சுங்குவார்சத்திரம் சாலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்வதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் விடுபட்ட பகுதிகளை நேற்று 2-வது கட்டமாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் நில நிர்வாக ஆணையர் நாகராஜன், ஐ.ஐ.டி. பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சரவணன், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் அசோகன் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பரந்தூர் ஏரி, வளத்தூர் ஏரி, கடப்பந்தாங்கல் ஏரி, கலியேரி மற்றும் அக்கம்மாபுரம் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வறிக்கை ஒப்படைக்கப்படும்

ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் கூறியதாவது:-

அதிகாரிகள் குழு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தங்கள் பணிகளை தொடங்கி உள்ளது. குழுவின் முக்கிய நோக்கம் எவ்வாறு நீர் நிலைகளை பாதிக்காமல் திட்டத்தை கொண்டு வருவது என்பதுதான். அதற்காக தொழில்நுட்ப வல்லுனர்களான அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு முறை வந்துள்ளோம். எல்லா நீர் நிலைகளையும் பார்வையிட்டோம். ஒரு சில நீர் நிலைகள் விடுபட்டதால் அதை பார்க்க வந்துள்ளோம். பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. தொழில் நுட்ப வல்லுனர்கள் மற்றும் நீர்வள பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பேராசிரியர்களும் வந்துள்ளார்கள். அவர்களிடம் கலந்தாலோசனை செய்யப்படும். இதற்கான ஆய்வு அறிக்கை இன்னும் சில வாரங்களிலேயே தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்.

வெளிப்படையானது

உயர்மட்ட குழுவிடம் பாதிக்கப்படும் மக்கள் அணுகி கோரிக்கைகள் அளித்தால் தமிழக அரசிடம் எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்கிறோம். உயர்மட்ட குழு வெளிப்படையானது. எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story