எள், கடலை, பயறு வயல்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு
எள், கடலை, பயறு வயல்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கோடைமழையால் பாதிக்கப்பட்ட எள், கடலை, பயறு, உளுந்து சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் வேளாண்மை துறையினர் ஆய்வு செய்தனர்.
எள், கடலை, உளுந்து சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செம்போடை குரவப்புலம் ஆதனூர், பன்னாள் கருப்பம்புலம், , கரியாப்பட்டினம், மருதூர் வடக்கு. நெய்விளக்கு, தென்னம்புலம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடி அறுவடை பணி முடிந்து விட்டது. இதை தொடர்ந்து அறுவடை முடிந்த வயல்களில் கோடைகால எள் சாகுபடி 5000 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் கடலை, உளுந்து, பயறு, சணல் சாகுபடியும் செய்யப்பட்டு இருந்தது. வேதாரண்யம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட எள் நன்றாக வளர்ந்து, பூத்து, காய்த்த நிலையில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கோடை மழை பெய்து வந்தது.
கோடை மழை
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி எள் செடிகள் அழுகி சாய்ந்து விட்டது இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதேபோல் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கடலை, உளுந்து, பயறு சணல் ஆகிய வயல்களிலும் தண்ணீர் தேங்கி உள்ளது
பாதிக்கப்பட்ட வயல்களை தமிழக அரசு கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேளாண்மை துறையினர் ஆய்வு
இதை தொடர்ந்து நாகை வேளாண்மை இணை இயக்குனர் தேவேந்திரன், வேதாரண்யம் வேளாண்மை அலுவலர் யோகேஷ் மற்றும் வேளாண்மை துறையினர் கரியாப்பட்டினம், குரவப்புலம், செம்போடை, மருதூர் வடக்கு ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட கடலை, எள், பயறு, உளுந்து, சணல் ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிப்பதாக வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.