பாலக்கோடு பஸ் நிலையத்தில்தரைத்தளம் அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு
பாலக்கோடு:
பாலக்கோடு பஸ் நிலையத்தில் சிமெண்டு தரைதளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் பஸ்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையொட்டி பஸ் நிலையத்தின் தரைதளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று பஸ் நிலையத்தில் தரைத்தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை தர்மபுரி பேரூராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரைத்தள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பழனி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயந்தி மோகன், ஒப்பந்ததாரர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.