பரமத்தி பகுதியில் வேளாண்மை திட்டப்பணிகளை கல்லூரி இயக்குனர் ஆய்வு
பரமத்தி பகுதியில் வேளாண்மை திட்டப்பணிகளை கல்லூரி இயக்குனர் ஆய்வு
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டாரம் செருக்கலை, இருட்டணை, மேல்சாத்தம்பூர், குன்னமலை உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், தரிசு நில மேம்பாட்டு திட்டம், 2020-21 கீழ் செருக்கலை கிராமத்தில் தரிசு நில மேம்பாடு தொகுப்பில் பருத்தி, சோளம், ஆமணக்கு பயிர்களின் வளர்ச்சி அதன் மூலம் விவசாயிகள் பெற்ற பலன்களை ஆய்வு செய்தார். இருட்டணை கிராமத்தில் 2022-23 ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் தரிசு நிலத்தொகுப்பினை ஆய்வு செய்த அவர் மேல்சாத்தம்பூர் கிராமத்தில் விவசாயி சந்திரசேகர் பயிர் செய்துள்ள நிலக்கடலை வயலை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு கோடை உழவு, விதை சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவது, விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்டங்கள், பயறு வகை பயிர்களுக்கு டி.ஏ.பி. கரைசல் தெளிப்பு, பருவத்திற்கு ஏற்ற பயிர், பயிர் சுழற்சி, பயிர் இடைவெளியினை பராமரிப்பது, ஊற்ற மேற்றிய தொழு உரமிடுதல், உயிர் உரங்களை பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனம், மழை நீரை சேமித்தல் போன்றவைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜெகதீசன் (மத்திய திட்டம்), ராஜகோபால் (மாநில திட்டம்), பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.