மாடியில் இருந்து தவறி விழுந்து காயம்: பிளஸ்-2 மாணவி சிந்துவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சை
மாடியில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பிளஸ் -2 மாணவி சிந்துவுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் சக்தி (வயது 43). இவர் கோடம்பாக்கம் பகுதியில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தேவி (36). இவர்களது மகள் சிந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் மாணவியின் கால் எலும்புகள் முறிந்தும், தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமடைந்தது.
இதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயிருக்கு போராடிய நிலையில் இருந்து சிகிச்சை மூலம் மீண்டு வந்த சிந்து கடந்த 2 ஆண்டுகளாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையிலே உள்ளார்.
இந்தநிலையில் ஆசிரியர்கள் மற்றும் தோழிகளின் உதவியுடன் வீட்டில் இருந்தபடியே படித்து சமீபத்தில் பிளஸ் -2 தேர்வு எழுதினார். இது குறித்து வெளியான செய்திகளை தொடர்ந்து மாணவி சிந்துவுக்கு அரசு செலவில்
உயர்தர சிகிச்சை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவியை சந்தித்து நலன் விசாரித்ததுடன் , கோரிக்கையையும் கேட்டறிந்தார்.
மாணவியின் கோரிக்கையை ஏற்று ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு எழுதும் பள்ளிக்கு வர அரசு தரப்பில் உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிந்தவுடன் மாணவி சிந்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் கடந்த 19- ந்தேதி சிகிச்சைக்காக ஓமந்தூரார் பன்னோக்கு ஆஸ்பத்திரியில் சிந்து அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எழும்பு முறிவு, பிசியோதெரபிஸ்ட் மற்றும் பல் சிகிச்சை போன்ற துறைகளில் இருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை ) முதல் டாக்டர்களின் ஆலோசனைக்கு பிறகு சிந்துவுக்கு சிகிச்சைகள் தொடங்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.