பாடி மேம்பால பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயம்: மயங்கி கிடந்தவர் வைத்திருந்த ரூ.1½ கோடி நகையை பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர்


பாடி மேம்பால பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயம்: மயங்கி கிடந்தவர் வைத்திருந்த ரூ.1½ கோடி நகையை பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர்
x

பாடி மேம்பாலம் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிரை காப்பாற்றியதுடன், அவரது பையில் இருந்த ரூ.1½ கோடி மதிப்புள்ள நகையை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

சென்னை

சென்னை மேற்கு மாம்பலம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் அரிகரன் (வயது 54). இவர், புழல் பகுதியில் உள்ள கதிரவன் என்பவருக்கு சொந்தமான தங்க நகைகள் செய்யும் பட்டறையில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அரிகரன், புழல் பகுதியில் இருந்து தியாகராயநகரில் உள்ள பிரபல நகை கடைக்கு பையில் நகைகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். பாடி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கோயம்பேடு நோக்கி செல்லும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அரிகரன், சாலையில் குப்புற விழுந்து மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அந்த வழியாக போலீஸ் ஜீப்பில் வந்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், சாலையில் ஒருவர் விழுந்து கிடப்பதையும், பொதுமக்கள் சுற்றி நிற்பதையும் கண்டு ஜீப்பில் இருந்து இறங்கி சென்று பார்த்தார்.

பின்னர் கூட்டத்தை கலைத்து விட்டு, சாலையில் குப்புற விழுந்து கிடந்த அரிகரனை நேராக புரட்டினார். அப்போது அவருக்கு உயிர் இருப்பதை கண்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல எண்ணி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகும் என்பதால் உடனடியாக அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் அரிகரனை ஏற்றி பாதுகாப்பாக அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். அரிகரன் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பையையும் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், பத்திரமாக எடுத்துக்கொண்டு சரக்கு ஆட்டோவை பின்தொடர்ந்து தனது ஜீப்பில் சென்றார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அரிகரனை சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுயநினைவு இன்றி இருந்த அரிகரன் குறித்த விவரத்தை கண்டறிய அவரிடம் இருந்த பெரிய பையை இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், திறந்து பார்த்தார். அதில் தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் இருப்பது தெரிய வந்தது. பையில் குறிப்பிட்டு இருந்த விலாசத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அரிகரனின் முதலாளி கதிரவனுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தார்.

உடனடியாக கதிரவனை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல்படி அந்த பையில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள 340 பவுன் நகைகள் இருப்பது தெரியவந்தது. அண்ணா நகர் உதவி கமிஷனர் ரவிசந்திரன் முன்னிலையில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கதிரவனிடம் நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.

தக்க சமயத்தில் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், விபத்தில் சிக்கி சாலையில் மயங்கி கிடந்த அரிகரன் உயிரை காப்பாற்றியதுடன், ரூ.1½ கோடி நகையையும் பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் நகையை உரியவரிடம் ஒப்படைத்த உதவி கமிஷனர் ரவிசந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், பெண் போலீஸ் வசந்தா மற்றும் போலீஸ் ஜீப் டிரைவர் தீபன் சக்கரவர்த்தி ஆகிய 5 பேரையும் நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

நகை உரிமையாளர் கதிரவனும், இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் போலீசாரின் மனிதாபிமானத்தையும், கண்ணியத்தையும் பாராட்டி நன்றி தெரிவித்து சென்றார்.


Next Story