வெறிநாய் கடி தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் வெறிநாய் கடி தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் வெறிநாய் கடி தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாநகராட்சி சுகாதார மையம்
மதுரை மாநகராட்சி சார்பில் மதுரை மாவட்டத்தில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு பெண்களுக்கு கர்ப்ப கால தடுப்பூசி மற்றும் பிரசவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக,தெரு நாய்கள் கடித்து காயம் ஏற்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேபிஸ் வேக்சின் என்ற வெறிநோய் தடுப்பூசி 4 கட்டங்களாக போடப்படுகிறது. பெத்தானியாபுரம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன. இந்த நாய்களால் நாள்தோறும் 5 முதல் 10 பேர் வரை கடிபடுகின்றனர். இவர்கள் உடனடியாக சிகிச்சை பெற பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வருகின்றனர். இங்கு இவர்களுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து எந்தெந்த தேதிகளில் அடுத்த தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப் படுகிறது.
தடுப்பூசி இல்லை
ஆனால்,கடந்த சில வாரங்களாக பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் வெறிநோய் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.இதன் காரணமாக, இந்த பகுதியில் நாய் கடித்து வருபவர்கள் அனைவரையும் இங்குள்ள செவிலியர்கள் ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி அனுப்பு கிறார்கள்.இதனால்,நாய் கடி வேதனையில் இருக்கும் பொதுமக்கள் ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஆரம்ப சுகாதார மையத்தில் இருக்கும் மருத்துவர்கள் நாய் கடித்து சிகிச்சைக்கு வருபவர்களை பரிசோதித்து நாய் கடித்த இடத்தின் ஆழம்,காயத்தின் தன்மை குறித்து பரிசோதிப்பது இல்லை என்றும் செவிலியர்களே காயத்தை பரிசோதித்து தடுப்பூசி செலுத்துகிறார்கள் என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
பொதுவாக, நாய் கடித்த இடத்தில் சாதாரண காயம் ஏற்பட்டால் 4 தடுப்பூசிகள் மட்டும் போதுமானது என்றும் கடித்த காயம் எலும்புவரை ஊடுருவி காணப்பட்டால் 5-வது தடுப்பூசி போட வேண்டும் என்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால்,பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார மையத்தில் இதை கவனத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் 4 தடுப்பூசிகள் மட்டும் செலுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நடவடிக்கை
மதுரையை பொறுத்தவரை அனைத்து பகுதிகளிலும் நாய் தொல்லை கட்டுக்கடங்காமல் உள்ளது. அன்றாடம் நாய் கடி படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் வெறிநாய் கடிக்கான ஒரு தடுப்பூசி செலுத்த 800 ரூபாய் வரை செலவாகிறது. இந்த அளவுக்கு செலவு செய்து தடுப்பூசி செலுத்த சாதாரண மக்களுக்கு வாய்ப்பு இல்லை.
எனவே, மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு பாத்திமா நகர் ஆரம்ப சுகாதார மையம் உள்பட மதுரை மாவட்டத்தில் இயங்கும் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் வெறி நாய் கடி தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாத வகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.