படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்பு
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள ஈருடையாம்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, ரங்கப்பனூர், ராவத்தநல்லூர், புத்திராம்பட்டு, கடுவனூர், கானாங்காடு, அரும்பராம்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து மக்காச்சோள பயிரை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். பயிர்கள் நன்கு செழித்து வளா்ந்து வந்ததால் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தோம். இந்த நிலையில் படைப்புழு தாக்குதலால் எங்களது பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் குறையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் வேளாண் அதிகாரிகள், எங்களது பயிர்களை பார்வையிட்டு படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் தவித்து வருகிறோம் என்றனர்.