கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - கொடூரத் தாய்க்கு போலீஸ் வலைவீச்சு...!
கல்லறை தோட்டத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை,
சிவகங்கையில் மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்புவனம் போலீசார் மானாமதுரை பை-பாஸ் சாலை அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பகுதியில் இன்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள கல்லறை தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாய் சிமெண்ட் சிலாப்பு பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அங்கு வேறு யாரும் இல்லாத நிலையில் எங்கிருந்து அழுகுரல் வருகிறது என்று போலீசார் தேடினர். அப்போது மழைநீர் கால்வாயில் தண்ணீர் இல்லாத பகுதியில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடந்தது.
அதனை போலீசார் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்றது யார்? தாயே அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லறை தோட்டம் பகுதியில் கால்வாயில் பச்சிளம் பெண் குழந்தையை போட்டு சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.