'இந்தியா' கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

‘இந்தியா’ கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, அது கொள்கை கூட்டணி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 'தாய் வீட்டில் கலைஞர்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

"உயிரும், உணர்வும் போன்றது தி.க.வும், தி.மு.க.வும். மிசா காலத்தில் இருட்டறையில் இருந்த எனக்கு தைரியம் கொடுத்தவர் ஆசிரியர் வீரமணி. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு வீரமணி தான் எனக்கு கொள்கை வழிகாட்டி.

தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா சொன்னார். தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கருணாநிதி சொன்னார். என்னைப் பொறுத்தவரை தி.க.வும், தி.மு.க.வும் உயிரும், உணர்வும் போன்றது. உயிரும், உணர்வும் இணைந்து உடல் இயங்குவதைப் போல் நாம் நமது இனத்தின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார் அண்ணா. தமிழ்நாடு அரசு தான் பெரியார், பெரியார் தான் தமிழ்நாடு அரசு என்றார் கருணாநிதி. நானும் அதையே வழிமொழிகிறேன்.

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி கருத்தியலாக கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும். அனைவர் குரலுக்கும் ஒரே மரியாதையும், மதிப்பும் இருக்க வேண்டும்.

அத்தகைய கூட்டாட்சி கருத்தியலைக் கொண்ட இந்தியாவை உருவாக்கவே 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளோம். 'இந்தியா' கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, அது கொள்கை கூட்டணி. தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பிறகு அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்து நாங்கள் செயல்படுகிறோம்."

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


Next Story