இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்


இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்
x

ராகுல்காந்தியின் 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' நாளை மும்பை தாதரில் நிறைவு பெறுகிறது.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை'யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது.

ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை நிறைவு செய்கிறார். பின்னர் அன்று மாலையில் மும்பை சிவாஜி பார்க்கில் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார்.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்- சரத்சந்திர பவார் கட்சி தலைவர் சரத்பவார் கலந்துகொள்கிறார்கள். மேலும் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க இருப்பதாக மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தெரிவித்தார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். மும்பை செல்லும் அவர், ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துகொள்வதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.


Next Story