`மேக் இன் இந்தியா' திட்டத்தில்உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்ஓசூரில் தம்பிதுரை எம்.பி. பேச்சு


`மேக் இன் இந்தியா திட்டத்தில்உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும்ஓசூரில் தம்பிதுரை எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 1 May 2023 12:30 AM IST (Updated: 1 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி துறையில் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என ஓசூரில் தம்பிதுரை எம்.பி. பேசினார்.

ஆலோசனை கூட்டம்

ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் `பி.என்.ஐ. வளம் 2023' என்ற தொழில் கண்காட்சி வருகிற 26 முதல் 28-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அதியமான் கல்விக்குழும தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்தியா வளர்ச்சியடைய விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் காண வேண்டும். தென்னிந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. மேலும் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். வட மாநிலங்களில் தொழில்முனைவோர், வர்த்தக துறையினர் அதிகளவில் உருவாகின்றனர். முன்னாள் நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் ஓசூரில் தொழிற்சாலைகள் வருவதற்கு வித்திட்டார்.

உற்பத்தி துறை

`மேக் இன் இந்தியா' திட்டத்தில் உற்பத்தி துறையில் இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடைய வேண்டும். தரமான, உற்பத்தி சார்ந்த பெரிய மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் அதிகளவில் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பி.என்.ஐ. செயல் இயக்குனர் பத்மநாபன் பேசுகையில், 26-ந் தேதி நடக்கும் தொழில் கண்காட்சியில் பெரிய நிறுவனங்களான அசோக் லேலண்ட், டி.வி.எஸ்., டைட்டான், டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

சமையல் போட்டிகள்

இந்த கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும் சமையல் போட்டிகள் மற்றும் இதர போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். இவ்வாறு அவர் பேசினார். இதில் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், பி.என்.ஐ. தர்மபுரி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முனிவரி பத்மநாபன், வளம் 2023 திட்டத்தலைவர் ராஜேஷ் கண்ணன், பி.என்.ஐ. ஒருங்கிணைப்பாளர் லதா ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story