சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. விழாவில் கலெக்டர் பூங்கொடி காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதையடுத்து போலீஸ், தீயணைப்பு துறை, என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள், தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழா பந்தல் அமைத்தல், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள், பார்வையாளர்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே சுதந்திர தினவிழாவில் போலீஸ்துறை சார்பில் நடத்தப்படும் அணிவகுப்புக்கு நேற்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஒத்திகை நடைபெற்றது. இதில் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி கம்பீரமாக சென்று ஒத்திகை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஒத்திகை நடத்தப்பட இருக்கிறது.