தென்காசியில் சுதந்திர தின விழா; கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினார்


தென்காசியில் சுதந்திர தின விழா; கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றி சிறப்பாக செயல்பட்ட 397 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

தென்காசி

தென்காசியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடியேற்றி சிறப்பாக செயல்பட்ட 397 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

சுதந்திர தின விழா

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நேற்று அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக விழாவிற்கு வந்த அவரை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் கலெக்டர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி காந்தன் பாரதிக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து 2 புறாக்களை பறக்க விட்டு மூவர்ண பலூனையும் பறக்க செய்தார்.

விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் மூன்று பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

397 பேருக்கு நற்சான்றிதழ்கள்

பின்னர் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி உள்பட 29 போலீசாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 89 வருவாய் துறை பணியாளர்கள், 14 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை பணியாளர்கள் மற்றும் அரசு மருத்துவமனை, மீரான் தனியார் மருத்துவமனை, 14 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 397 நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் ஆய்க்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி சிந்தாமணி இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப்பள்ளி, இலத்தூர் விலக்கு ஸ்பெக்ட்ரம் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அந்தோணி பெர்னான்டோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜ மனோகரன், தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா, சுகாதார பணிகள் இணை இயக்குனர் பிரேமலதா, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, கலெக்டர் அலுவலக மேலாளர் ரவீந்திரன், மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, ஆலங்குளம் யூனியன் தலைவி திவ்யா மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story