வருகிற 18-ந்தேதி முதல் மணல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்


வருகிற 18-ந்தேதி முதல் மணல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எம்.சாண்ட் மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை

அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே அதிகளவில் விபத்துகள் ஏற்படும் மாநிலங்களில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. சாலை விபத்துகளை தடுக்க வேண்டிய காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், வருவாய் துறையினர், சட்டவிதிகளுக்கு மாறாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை அனுமதிக்கின்றனர். இதனால் சாலைகள் மோசமடைந்து, விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

மத்திய அரசு வாகனங்களுக்கு எப்.சி.யின்போது ஒட்டப்படும் ஒளிரும் பட்டைக்கு 11 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை 2 நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, அதிக அளவில் கட்டண வசூல் செய்கிறது.

ஆயிரம் ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரையுள்ள ஒளிரும் பட்டைகளுக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு முறைகேடு செய்கிறார்கள். கனிம கொள்ளையை தடுக்க உடனடியாக இணைய வழி கட்டண முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4 ஆயிரம் எம்.சாண்ட் கிரஷர்களை அரசு முறைப்படுத்த வேண்டும்.

சென்னையை சுற்றியுள்ள 8 மாவட்டத்திற்கு ஒரே ஒரு மணல் குவாரி தான் உள்ளது. அதில் வழங்கப்படும் மணல் தரமற்றதாகவும், அளவு குறைவாகவும், விலை உயர்வாகவும் இருக்கிறது. எனவே தரமான மணல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

எங்களின் இந்த கோரிக்கைகளை அரசு போக்குவரத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த போகிறோம் என்று சொன்னபோதும் அவர்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

எனவே 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறோம். சென்னை சுற்றியுள்ள 8 மாவட்டங்களில் 20 ஆயிரம் எம்.சாண்ட் மணல் லாரிகள் 18-ந்தேதி முதல் ஓடாது.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வள்ளூவர்கோட்டத்தில் 18-ந்தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story