சதுரங்க விளையாட்டின் மீது தமிழக இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடத்தப்பட்டதால் தமிழக இளைஞர்கள் சதுரங்க போட்டியின் மீது அதிக ஆர்வம் வந்துள்ளது என சர்வதேச நடுவர் சிவகாசி அனந்தராம் பேட்டி அளித்துள்ளார்.
சிவகாசி,
செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடத்தப்பட்டதால் தமிழக இளைஞர்கள் சதுரங்க போட்டியின் மீது அதிக ஆர்வம் வந்துள்ளது என சர்வதேச நடுவர் சிவகாசி அனந்தராம் பேட்டி அளித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்தும் 210 நடுவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிவகாசியை சேர்ந்த சர்வதேச நடுவர் அனந்தராம் மேல் முறையீட்டுக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.
அவர் சிவகாசி திரும்பிய நிலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியந்து பாராட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இந்தபோட்டி தமிழகத்தில் நடைபெற்றதால் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் சதுரங்க விளையாட்டின் மேல் உள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளது.
அதிசயம்
இந்திய அணியில் உள்ள வீரர்கள் மிகவும் திறமையானவர்கள். இனி வரும் காலத்தில் சதுரங்க போட்டிகளில் இந்தியா வீரர்கள் அதிக அளவில் சாதிப்பார்கள்.
மொத்தம் இந்தியாவில் 75 கிரான்ட்மாஸ்டர்களில் 27 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதில் நாம் பெருமைபட வேண்டும். இதுவரை வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி சதுரங்க போட்டியை பார்த்தது கிடையாது. ஆனால் மாமல்லபுரத்தில் இந்த அதிசயம் நடந்தது.
முறையீட்டுக்குழு
2001-ம் ஆண்டு முதல் சர்வதேச நடுவராக பணியாற்றி வருகிறேன். 2008-ல் ஜெர்மனி, 2010-ல் ரஷியா, 2012-ல் துருக்கி, 2014-ல் நார்வே, 2016-அசர்பைஜான் வாகூடு, 2018-ல் ஜார்ஜியா, 2022-ல் சென்னை மாமல்லபுரம் ஆகிய 7 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறேன்.
6 உலக சாம்பியன் போட்டிகளில் தலைமை நடுவராக பணியாற்றி இருக்கிறேன். தற்போது மேல்முறையீட்டுக்குழுவில் இடம் பிடித்து இருந்தேன். நார்வே-மங்கோலியா நாட்டு வீரர்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடுவர் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுகுழுவில் முறையிட்டனர். பின்னர் மேல்முறையீட்டுகுழு கொடுத்த தீர்ப்பினை வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்.
4-வது இடம்
உலக தரத்தில் தற்போது இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. மாமல்லபுரத்தில் போட்டி நடத்த தமிழக அரசு முடிவு செய்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அந்த ஆலோசனை குழுவில் நான் இடம் பெற்றேன்.
இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே தற்போது தான் அதிகமாக 186 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.