குற்றாலத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்; சுற்றுலா பயணிகள் கோரிக்கை


குற்றாலத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்; சுற்றுலா பயணிகள் கோரிக்கை
x

குற்றாலத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலத்தில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிறுக்கிழமை விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

வழக்கமாக குற்றால சீசனின்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவது வழக்கம். ஆனால் இந்த சீசனின் போது குறைவான போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அவ்வப்போது ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆனால் தற்போது அருவிக்கரைகள், பஸ்நிலையம், பஜார் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூட போலீசார் மிகவும் குறைவாக காணப்படுகிறார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

தற்போது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகிய மூன்று அருவிகளிலும் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவிலும் அருவிக்கரை பகுதிகளில் போதுமான போலீசார் பணியில் இல்லை என சுற்றுலா பயணிகள் கூறுகிறார்கள்.

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த தஞ்சாவூரை சேர்ந்த தனசேகரன் என்பவர் கூறுகையில், "குற்றாலத்தில் பெரும்பாலும் இரவு நேரங்களில் மதுபோதையில் தான் குளிக்க வருகிறார்கள். அப்போது பெண்களும் குளிக்க வருவதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனவே குற்றாலத்தில் இன்னும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்" என்றார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story