வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பக சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வனவிலங்குகள் நடமாட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் முதுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு போதிய பசுந்தீவனம் செழித்து வளர்ந்து உள்ளன. இதைத்தொடர்ந்து முதுமலை வனப்பகுதி மற்றும் அதன் சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இதனால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் வனத்துறையினர் முதுமலை சாலையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கும் சமயத்தில் சத்தமிடுதல் உள்ளிட்ட இடையூறை வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்கிறது.
வனத்துறையினர் கண்காணிப்பு
இதன் காரணமாக தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வரம்பு மீறும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, விடுமுறை நாட்களில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இந்த சமயத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையோரம் வந்து நிற்கும் போது, வெளி மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வனவிலங்குகளை தொந்தரவு செய்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ரோந்து பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசக்கூடாது. வனவிலங்குகளுக்கு இடையூ செய்யக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.