ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்வு
வால்பாறையில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளது.
சோலையாறு அணை
கோவை மாவட்டம் வால்பாறையில் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை உள்ளது. கோடை காலத்தில் கொளுத்திய வெயில் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து 60 அடிக்கும் கீழே சென்றது. இதனால் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் வால்பாறை பகுதியில் மே மாதத்தில் அவ்வப்போது கோடைமழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக பருவ நிலை மாற்றம் காரணமாக ஏப்ரல் மாதத்தில் இருந்தே கோடைமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதன்காரணமாக வால்பாறை பகுதியில் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
272.11 கன அடி தண்ணீர் வரத்து
இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 70.23 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், அணைக்கு 272.11 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது. ஒரிரு நாளில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு அதிகளவிலான தென்மேற்கு பருவமழை கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.