குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:30 AM IST (Updated: 19 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. எனவே விரைவில் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது.

தென்காசி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. எனவே விரைவில் சீசன் தொடங்க வாய்ப்புள்ளது.

மலைப்பகுதியில் சாரல் மழை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். இந்த சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள். ஆனால் இந்த ஆண்டு சீசன் தொடங்குவதற்கு தாமதமாகி வருகிறது. அருவிகள் வறண்டு காணப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதேபோல் குற்றாலம், தென்காசி பகுதியிலும் சாரல் மழை பெய்தது. இதையொட்டி மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஐந்தருவியில் 4 கிளைகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

இதனை அறிந்த உள்ளூர்வாசிகளும், குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தற்போது குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி ரம்மியமாக உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் இந்த நிலை நீடித்து விரைவில் குற்றாலம் சீசன் தொடங்கும் என தெரிகிறது.


Next Story