ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும் நுரையுமாக ரசாயன கழிவுநீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நுங்கும் நுரையுமாக ரசாயன கழிவுநீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கனமழை

கர்நாடக மாநிலம் நந்தி மலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1,537 கனஅடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,460 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும். அணையில் தற்போது 41.16 கனஅடி தண்ணீர் உள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ரசாயன கழிவுகள் அதிகளவில் திறந்து விடப்பட்டு இருப்பதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மதகுகள் வழியாக தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி கழிவுநீர் வெளியேறுகிறது.

விவசாயிகள் கவலை

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என அறிவுறுத்தினர்.

இதனிடையே, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து கெலவரப்பள்ளி அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரும்போது அதில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதும், அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் தண்ணீர் நுங்கும், நுரையுமாக வெளியேறுவதால் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story