சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?


சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
x

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

நாமக்கல்

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

காலாவதியான சுங்கச்சாவடிகள்

தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி கூறியதாவது:-

நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில் 20 சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டன. இருப்பினும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் சட்ட விரோதமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மாநில அரசு தீர்மானம் போட்டு, இந்த சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. இருப்பினும் மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு வாகனத்தை வாங்கும்போதே சாலைவரி கட்டி விடுகிறோம். அதில் சாலை மேம்பாட்டு பணிகளும் அடங்கும். எனவே சுங்கச்சாவடி என்பதே தேவையில்லாத ஒன்று. அங்கு பகல் கொள்ளை நடக்கிறது என்றே சொல்லலாம். எனவே தான் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். சாலை மேம்பாட்டுக்கு வரியுடன் சேர்த்து கூடுதல் பணம் தேவை என்றால், அதை ஒரே முறையில் கட்ட தயாராக இருக்கிறோம்.

நாமக்கல்லில் இருந்து அகமதாபாத் செல்ல ஒரு லாரிக்கு டீசல் மட்டும் சுமார் ரூ.52 ஆயிரத்துக்கு நிரப்ப வேண்டி உள்ளது. 27 சுங்கச்சாவடிகளை கடக்க சுமார் ரூ.13 ஆயிரம் செலவாகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, சுங்கச்சாவடிகளை அகற்றினால் மட்டுமே லாரி தொழிலை காப்பாற்ற முடியும். சுங்கச்சாவடிகளில் பணம் கொடுத்து விட்டு செல்வதால், காலதாமதம் ஏற்படுகிறது என கூறி பாஸ்ட் டிராக் முறை கொண்டு வரப்பட்டது. அதிலும் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் வாகனங்களுக்கு பணம் வசூலிக்க கூடாது. ஆனால் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வே-பிரிட்ஜ், கழிவறை, டெக்கவரி வண்டி போன்றவை இல்லை. சுங்கச்சாவடிகளில் லாரி டிரைவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏழைகள் பாதிப்பு

நாமக்கல்லில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் ஜி.பி.சாமி:-

சுங்க கட்டண உயர்வு என்பது அடிதட்டு ஏழைகள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த கூடியது. தற்போது ஏழை மக்கள் மாதத்தில் பாதி நாட்கள் வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். கிடைக்கும் குறைவான வருமானத்தில் தான் வயிற்றை நிரப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருகிற அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் பல சுங்கச்சாவடிகளை கடந்து வரவேண்டி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையாலும், உதிரி பாகங்கள் விலை உயர்வாலும் சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்துள்ள நிலையில் சுங்கக்கட்டண உயர்வு என்பது மக்களின் தினசரி வாழ்க்கையில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும்.

நாங்கள் பீரோ, கட்டில் உள்ளிட்ட பர்னிச்சருக்கு தேவையான மூலப்பொருட்களை கோவை, சேலம், ஈரோடு, கரூர் போன்ற பகுதிகளிலும் இருந்து எடுத்து வரும்போது சுங்கக்கட்டணம் அதிக அளவில் செலுத்த வேண்டி உள்ளது. அதில் ஏற்படுகின்ற அதிக செலவினங்கள் பொருட்கள் மீது தான் ஏற்றப்படுகிறது. இதை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வியாபாரிகளுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகிறது. எந்த வகையில் பார்த்தாலும் சுங்கக்கட்டண உயர்வு ஏழைகளை நேரடியாக பாதிக்கிறது என்பது தான் உண்மை. மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு ஏழை மக்கள் பாதிக்காத வண்ணம் இருக்க, வல்லுனர் குழுக்களை அமைத்து தீர்வு காண வேண்டும்.

சுங்ககட்டண உயர்வை திரும்பபெற வேண்டும்

பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் மணி:-

பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுங்கக்கட்டணமும் அதிகரித்து கொண்டே செல்வது வாகன ஓட்டிகளை மேலும் துன்பப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. கட்டண உயர்வுக்கு ஏற்ப சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக சாலைகளில் முறையான தெருவிளக்கு வசதிகள் அமைத்து தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டுவது என்பது கடினமாக இருக்கிறது.

சுற்றுலா வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் அதிகரிக்கும் போது, அதை சுற்றுலா பயணிகளிடம் தான் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சவாரி கிடைப்பது குறையும். தினசரி சம்பளத்திற்கு செல்லும் என்னை போன்ற டிரைவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சுங்கக்கட்டண உயர்வை அரசு திரும்பப்பெற வேண்டும்.

விலைவாசி உயரும்

பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார்:-

மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் சுங்கக்கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சுங்கக்கட்டணம் உயர்வால் லாரி, வேன் போன்ற சரக்கு வாகனங்களின் வாடகை உயரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலைகளும் உயர வாய்ப்பு உள்ளது. எனவே நலிவடைந்து வரும் லாரி தொழிலை காப்பாற்ற மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தடை செய்ய வேண்டும்

ராசிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன்ராஜ்:-

தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 29 சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களுக்கு சுமார் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் நேரடியாக பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காரணம் ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை அன்றாடம் அருகில் உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்கின்றபோது இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். அப்படி கடந்து செல்லும் அந்த விவசாயி, கொண்டு செல்லும் வாகனத்திற்கு கட்டாயம் சுங்கம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த விளை பொருட்கள் மீது கூடுதலாக விலைவைத்து விவசாயி விற்கின்றார்.

அதேபோல ஜவுளி தொழில்களிலும் மற்றும் இதர தொழில்களிலும் உற்பத்தி ஆகின்ற பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து சுங்கச்சாவடியை வாகனங்கள் கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அதை உற்பத்தி செய்கின்றவர்களும், அதை எடுத்துச் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சுங்க வசூல் விதிப்பானது பொதுமக்களின் தலையில் நேரடியாக இறங்குகின்றது. எனவே மக்களை பொருளாதார பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க இந்த சுங்க கட்டணம் வசூலை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story