பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்வு
பண்டிகை காலத்தையொட்டி பட்டுக்கூடு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. கிலோ ரூ.550-க்கு விற்பனையாகிறது.
பட்டுக்கூடு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி, மானாவாரி பயிர்கள், சிறு தானிய உற்பத்தி உள்ளிட்ட விவசாயம் தொழிலோடு பட்டுக்கூடு உற்பத்தியிலும் விவசாயிகள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கீரனூர் உள்பட பரவலாக பட்டுக்கூடு உற்பத்தி தொழில் காணப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக கடைப்பிடிக்கப்படும் விவசாய நடைமுறைகளை பின்பற்றி பட்டுப்புழுக்களை வளர்த்து, அது கூடு வைத்ததும் மொத்தமாக எடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு பட்டுக்கூடு அங்காடி உள்ளது. இதே வளாகத்தில் பட்டுக்கூடு நூற்பாலையும் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து பட்டுக்கூடுகளை அரசு கொள்முதல் செய்து, நூற்பாலையில் பட்டுநூலாக மாற்றி காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா பட்டுபாிமாற்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கொள்முதல் விலை உயர்வு
இந்த நிலையில் தற்போது பண்டிகை காலமாக கருதப்படுகிறது. அதாவது தீபாவளி முதல் பொங்கல் பண்டிகை வரை பட்டுக்கூடுகளுக்கு விலை அதிகமாக இருக்கும். இது இதற்கான சீசன் காலமாகும். இதில் பட்டுக்கூடு விலை தொடர்ந்து உயரும். அந்த வகையில் புதுக்கோட்டையில் பட்டுக்கூடு கொள்முதல் விலை தற்போது அதிகரித்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.550-க்கு அரசு கொள்முதல் செய்கிறது. பட்டுக்கூடு தரத்தினை பொறுத்து விலை மாறுபடும். இந்த நிலையில் பட்டுக்கூடு விற்பனை விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதத்தில் கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையாகி உள்ளது. இனி விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல விவசாயிகளிடம் இருந்தும் பட்டுக்கூடுகள் அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனைக்கு வரும்.