பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு


பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி சாகுபடி

நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு விளையும் உருளைக்கிழங்கு ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

கொள்முதல் விலை உயர்வு

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20 வரை விற்பனையானது. தற்போது கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.30 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற பீட்ரூட் ரூ.55-க்கும், ரூ.100-க்கு விற்ற அவரை ரூ.140-க்கும், ரூ.25-க்கு விற்ற கேரட் ரூ.40-க்கும், பட்டாணி கிலோ ரூ.120-க்கும் விற்பனை ஆகிறது. பெரும்பாலான காய்கறிகளின் கொள்முதல் விலை உயர்ந்து இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.இதற்கிடையே கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பீன்ஸ் விலை பாதியாக குறைந்து ரூ.50-க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், நீலகிரியில் நிலவும் காலநிலை காரணமாக இங்கு விளையும் பீன்ஸ் சமவெளி பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும். ஆனால், கடந்த சில வாரங்களாக தாளவாடி உள்ளிட்ட இடங்களில் இருந்து பீன்ஸ் வரத்து அதிகரித்து இருப்பதாலும், அந்த பீன்ஸ் விலை குறைவாக இருப்பதாலும், நீலகிரி பீன்ஸ் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விலை பாதியாக குறைந்து விட்டது. பீன்ஸ் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றனர்.


Next Story