பட்டாசு, எண்ணெய், பருப்பு வகை விலை அதிகரிப்பு
பட்டாசு, எண்ணெய், பருப்பு வகை விலை அதிகரித்து உள்ளது.
ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபம் ஏற்றி கொண்டாடுவோம்.
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்த படியாக பலகாரங்கள். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பலகாரங்கள் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்போடு தீபாவளி கொண்டாட்டம் நடந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்ட நிலையில் பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விற்பனை மற்றும் விலை பற்றி வணிகர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
விலை குறைய வாய்ப்பு
சமையல் எண்ணெய் உற்பத்தியாளரும், விருதுநகர் வியாபார தொழிற்துறை சங்க செயலாளருமான இதயம் முத்துவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சமையல் எண்ணெய் இறக்குமதி குறைவு, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட கடலைஎண்ணெய்யின் விலை 30 சதவீதமும், நல்லெண்ணெய் விலை 35 சதவீதமும் உயர்ந்துள்ளது. இனிவரும் மாதங்களில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
துவரை கிலோ ரூ.120
பருப்பு வணிகர் கே.எம்.ஆர். கார்த்திகேயன்:- பருப்பு வகைகளை பொருத்தமட்டில் கடந்த ஆண்டு விலைக்கும், தற்போதைய விலைக்கும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. அப்போது துவரை கிலோ ரூ.108-க்கு விற்பனை ஆனது. தற்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அரசு நியாய விலைக்கடைகள் மூலம் பொது மக்களுக்கு 80 சதவீதம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி விடுவதால் 20 சதவீத பொருட்களையே வெளி மார்க்கெட்டில் வாங்க வேண்டிய நிலையில் சில்லறை வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமையல்எண்ணெய் வணிகர் சாவி. நாகராஜன்:-
சமையல் எண்ணெய்யை பொறுத்தமட்டில் பாமாயில் தான் சமையல் எண்ணெய் சந்தையினை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது. கடந்த ஆண்டு கிலோ ரூ.190-க்கு விற்ற கடலை எண்ணெய் தற்போது ரூ.195-க்கு விற்பனை ஆகிறது. தற்போது குஜராத், ராஜஸ்தானில் நிலக்கடலை சாகுபடி தொடங்கி விட்டதால் மத்திய அரசு சமையல் எண்ணெய்க்கும் வரி விலக்கை ரத்து செய்ய வாய்ப்புள்ளது. சமையல் எண்ணெய் விற்பனையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை.
வரத்து குறைவு
வத்தல் வணிகர் பழனி குமார்:- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி நாடு வத்தல் இல்லாத நிலையில் ஆந்திராவில் இருந்து தான் வத்தல் வந்து கொண்டிருந்தது. அப்போது கிலோ ரூ. 100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. தற்போதும் ஆந்திராவை தான் வத்தல் தேவைக்கு நம்பியுள்ளோம். வரத்து குறைந்து விட்டதால் தற்போது ரூ.250 வரை உயர்ந்து விட்டது.
இனிப்பு பொருட்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இனிப்பு மற்றும் கார தயாரிப்பாளர் கார்த்திக் சிங் கூறுகையில்,
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை எளிய முறையில் கொண்டாடப்பட்டது. தற்போது கொேரானா பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு இனிப்பு, கார வகைகள் விற்பனை அதிகரித்து உள்ளது.
ஜமீன் கொல்லங்கொண்டானை சேர்ந்த ஜவுளி வியாபாரி வனராஜ் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிகளின் விலை சற்று அதிகரித்து உள்ளது. இதனால் ஜவுளி வியாபாரம் குறைந்துள்ளது. ஜவுளி துணி ரகங்களை ஏற்றம், இறக்கம் இல்லாமல் ஒரே விலையில் கிடைக்க அரசு நிர்ணயம் செய்தால் எங்களை போன்ற சிறிய ஜவுளி வியாபாரிகள், தொழிலாளர்கள் பயன்பெறுவர்.
கடைகளில் ஆர்டர்
தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அதிரசம் செய்வது, முருக்கு சுடுவது, சீடை, குலோப்ஜாமூன் ஆகிய பலகாரங்களை வீட்டில் அனைவரும் சோ்ந்து தயாரிக்க ஆரம்பித்து விடுவர். பின்னர் இவற்றை தீபாவளி அன்று அருகில் உள்ளவர்கள், உறவினர்களுக்கு கொடுத்து மகிழ்வர். ஆனால் தற்ேபாது பெரும்பலான வீடுகளில் பலகாரங்கள் செய்வதில்லை. கடைகளில் முன்னதாக ஆர்டர் கொடுத்து வாங்கி விடுகின்றனர்.
எண்ணெய் விலை உயர்வு
இந்தியாவை பொருத்தமட்டில் சமையல் எண்ணெய் தேவைக்கு இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளையே நம்பி இருக்கிறது. அதிலும் இந்தோனேசியா மற்றும் மலேசிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. சமையல் எண்ணெய்யில் 70சதவீதம் பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் சமையல் எண்ணெய் விலை குறைப்புக்காக மத்திய அரசு சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்ததுடன் உள்ளூர் சமையல் எண்ணெய் வணிகர்களும் கிலோவுக்கு ரூ.15 வரை விலையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனாலும் சமையல் எண்ணெய் வணிகர்கள் தரப்பில் விலை குறைப்புக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ரஷியா, உக்ரைன் பிரச்சினையால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்பட்டது. பாமாயில் இறக்குமதிக்கும் இடையில் இந்தோனேசியா தடை விதித்தநிலையில் சமையல் எண்ணெய் இறக்குமதி குறைந்தது. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் எள் மற்றும் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டநிலையில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர தொடங்கியது .
60 சதவீதம் பட்டாசு உற்பத்தி
பட்டாசு உற்பத்தியாளர் சேவுகன்:- குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளின் உற்பத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, மூலப்பொருட்களின் விலை ஏற்றம், ஊழியர்கள் பற்றாக்குறை, சீதோஷன நிலை ஆகிய காரணங்களால் வழக்கமாக செய்யப்படும் உற்பத்தியை இந்த ஆண்டு செய்ய முடியவில்லை. இந்த ஆண்டு சுமார் 60 சதவீதம் மட்டுமே எங்களால் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட உற்பத்தி குறைவால் பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் அதிகம் விரும்பும் பேன்சிரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவு உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 சதவீதம் பட்டாசு விலை உயர்ந்துள்ளது என்றார்.
சரவெடிக்கான தடை நீங்குமா?
வழக்கமான தீபாவளி ஸ்பெஷல் சரவெடிதான். கடந்த சில ஆண்டுகளாக சரவெடி உற்பத்திக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் வாடிக்கையாளர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது. அடுத்த ஆண்டாவது சரவெடி உற்பத்திக்கான தடையை நீக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.