மீன், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு


மீன், கோழி இறைச்சி விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன், கோழி இறைச்சி விலை அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்கள் மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக அதிகரித்து உள்ளது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தடைக்காலம் நாளை மறுநாளுடன் (புதன்கிழமை) முடிவுக்கு வருகிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் நாட்டுப்படடகுள் மட்டும் கடலுக்கு சென்று வருகின்றன. இதனால் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த மீன்வியாபாரி பக்ருதின் கூறும் போது, மீன்பிடி தடைக்காலங்களில் மீன்கள் விலை வழக்கமாக அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரத்தை விடவும் தற்போது விலை அதிகரித்து உள்ளது. கடந்தவாரம் ரூ.300-க்கு விற்பனையான பாறை மீன்கள் ரூ.800-க்கு விற்பனையாகின்றன. இதே போன்று ஒவ்வொரு மீன்களின் விலையும் அதிகரித்து உள்ளது என்று தெரிவித்தார்.

கறிக்கோழி

இதே போன்று கறிக்கோழிகள் விலையும் அதிகரித்து உள்ளது. கடும் வெயில் காரணமாக கறிக்கோழிகள் எளிதில் இறந்து விடுவதாகவும், இதனால் கோழிகள் வரத்து குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக கறிக்கோழியின் விலை ஒரு கிலோ ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டன. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.


Next Story