சென்னையில் தொற்று அதிகரிப்பு: கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
டெல்லி, மராட்டியம், கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சியின், அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணாநகர், பெருங்குடி, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் செங்கல்பட்டிலும் அதிகமாக பரவி வருகிறது. காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறிப்பிடத்தக்க வகையிலும் அதிகரிக்கிறது.
ஒரு நிறுவனத்தில் மட்டும் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பியவர்கள் என ஆங்காங்கே குடும்பம், குடும்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இருந்தபோதிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
கொரோனா தடுப்பூசி
தற்போது அதிகரிக்கும் பாதித்தோர் எண்ணிக்கை, உருமாறும் கொரோனா வைரஸ், நோய் எதிர்ப்பு சக்தியை விட வீரியம் உள்ளது என மறைமுகமாக உறுதி செய்கிறது. தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 82.55 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை. இதைப்போல் 2-வது தவணை தடுப்பூசி போட தகுதியானவர்களில், 1.22 கோடி பேர் தடுப்பூசி போடாமல் இருந்து வருகின்றனர். மேலும் 13 லட்சம் பேர் 'பூஸ்டர் டோஸ்' செலுத்தாமல் உள்ளனர்.
எனவே தடுப்பூசி போட தகுதியான அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தொற்று அறிகுறி இருப்பின் உடனடியாக அவருக்கு தேவையான பரிசோதனை செய்து தாக்கத்தின் வீரத்துக்கு ஏற்பட்ட தேவையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
இணைநோய்கள் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு எளிதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள், கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில், முககவசம் அணிவது மிகவும் அவசியம். சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி ஊழியர்கள் அனைவரும் கொரோனாவை தடுக்கும் பணியில் மிகவும் தீவிரமாகவும், கவனத்துடனும், உறுதியுடனும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.