ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
பென்னாகரம்,
கர்நாடகா, கேரள மாநிலங்களில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரிநீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.