வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வு மக்களை பாதிக்கும்-கே.எஸ்.அழகிரி பேட்டி


வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வு மக்களை பாதிக்கும்-கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 8 Jun 2023 6:30 PM GMT (Updated: 9 Jun 2023 3:01 AM GMT)

வணிக பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வு மக்களை பாதிக்கும் என கே.எஸ்.அழகிரி கூறினார்.

அரியலூர்

மின்கட்டணம் உயர்வு

தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அரியலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பது மக்களை பாதிப்படைய செய்யும். ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களால் தாங்க முடியாது.

தமிழகத்தில் விமானம், ரெயில்வே, சாலை உள்ளிட்டவைகளில் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனை மேம்படுத்தினால் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும்.

பூரண மதுவிலக்கு

வெளிநாட்டு மூலதனம் வராது என தமிழக கவர்னர் கூறியிருப்பது அபசகுணமாகும். உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் தமிழக அரசு முன்னேறி உள்ளது. ரெயில்வே வாரியம் முழுமையாக செயல்படாததால் தான் ஒடிசா ரெயில் விபத்து நடைபெற்றுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க மனித தவறுதான் காரணம். இதற்கு எந்த ஒரு அமைப்பையும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல.

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். முருகன் பெயரை வைத்துள்ள செந்தில் பாலாஜி கூறுவதை நம்புவோம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒரு அணியாக திரட்டுவோம். இந்த அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது ஒரு பிரச்சினை அல்ல. கூட்டணியில் பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story