அகழாய்வு பணியை பார்வையிட மாணவர்கள் வருகை அதிகரிப்பு


அகழாய்வு பணியை பார்வையிட மாணவர்கள் வருகை அதிகரிப்பு
x

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை பார்வையிட மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டை

அகழாய்வு பணி

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான தொல்லியல் அடையாளங்கள் இருந்த நிலையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இதுவரை வட்ட சில்லுகள், கண்ணாடி மணிகள், பச்சை கல் மணிகள், அகேட், படிக கல் மணிகள், கார்னீலியன், கண்ணாடி வளையல்கள், தங்க மூக்குத்தி, சுடுமண் விளக்கு உள்பட சுமார் 488 பொருட்கள் வரை கிடைத்துள்ளன. தொடர்ந்து அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் அதிகம் பேர் வருகை தருகின்றனர். இதில் மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது.

17 குழிகள்

இந்த நிலையில் மன்னர் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் அகழாய்வு பணியை பாா்வையிட்டனர். அகழாய்வு குறித்தும், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

"இந்த அகழாய்வில் இதுவரை மொத்தம் 17 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் வரை பணிகள் மேற்கொள்ள ஆணை உள்ளது. அதுவரை இந்த பணிகள் நடைபெறும். மழை நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்படும்'' என்றார்.


Next Story