பந்தயத்தில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களால் விபத்து அதிகரிப்பு
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபடும் இருசக்கர வாகனங்களால் விபத்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பந்தயம்
சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாகும். 6 வழிப்பாதைகளை உள்ளடக்கிய இந்த சாலையில் செல்வதன் மூலம் ஊரின் உள்ளே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வதை தவிர்க்கலாம். இந்த சாலை வழியாக தினமும் மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ், லாரி என்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தற்போது மோட்டார் சைக்கிள்கள் பந்தயம் செல்லும் சாலையாக மாறி வருகிறது. சென்னை மற்றும் பெங்களூரு பெருநகரங்களில் பணிபுரியும் வாலிபர்கள் விடுமுறை நாட்களில் வேலூர் மாவட்டத்தின் வழியாக நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சத்தம் எழுப்பியபடி உயர்தர மோட்டார் சைக்கிள்களில் சென்று பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். இதனை பார்த்து மற்ற வாகன ஓட்டிகள் பயந்து ஒதுங்கி செல்லும் நிலை காணப்படுகிறது.
பெண் காயம்
இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்து 6 உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னையை நோக்கி சீறிபாய்ந்து சென்று கொண்டிருந்தன. வாகன ஒட்டிகள் ஒரே மாதிரியான ஆடை அணிந்து இருந்தனர். வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே மாலை 5 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பெண் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது. இதில் அந்த பெண் காயம் அடைந்தார்.
இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபரை கண்டித்தனர். இதற்கு அவருடன் வந்த மற்ற வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுபற்றி தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் உடனடியாக அங்கு சென்று காயமடைந்த பெண் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காயமடைந்த பெண்ணிற்கு அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே, வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவர்கள் மீது வழக்கு மற்றும் அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.