போடியில் மருத்துவமனை, கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரி சோதனை


போடியில் மருத்துவமனை, கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 9 Feb 2023 2:00 AM IST (Updated: 9 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

போடியில் உள்ள மருத்துவமனை, கட்டுமான நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தேனி

போடியில் உள்ள தனியார் மருத்துவமனை, 2 ஏலக்காய் கடைகள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனம் ஆகிய 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏலக்காய் கடைகளில் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேநேரம் தனியார் மருத்துவமனை மற்றும் கட்டுமான நிறுவனத்தில் இரவு வரை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. குறிப்பாக கட்டுமான நிறுவனத்தில் விடிய, விடிய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக அதே தனியார் மருத்துவமனை மற்றும் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்களை கேட்டு அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மதுரை வருமான வரித்துறை துணை இயக்குனர் மைக்கேல் ஜெரால்டு, தேனி வருமான வரி அலுவலர் அம்பேத்கர் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் மாலை அதிகாரிகள் தங்களது சோதனையை முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

போடியில் 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story