மதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு


மதுரை கட்டுமான நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு
x

மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அலுவலர்களின் சோதனை நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை

மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் தொடர்ந்து நேற்று 3-வது நாளாக வருமானவரித்துறை அலுவலர்களின் சோதனை நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனங்கள்

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 2 நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. நேற்று 3-வது நாளாக ஏற்கனவே சோதனை நடத்திய வருமானவரித்துறை அலுவலர்களுக்கு பதிலாக புதிதாக அலுவலர்கள் வந்து சோதனையை தொடர்ந்தனர்.

3 நாள் சோதனையில் சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தவிர, பல நூறு சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், நகையின் மதிப்பீடு இதுவரை கணக்கிடப்படவில்லை என்றும், இதற்காக நகை மதிப்பீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

விசாரணை

இந்த சோதனை அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் நடந்தது. நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கிளாட்வே சிட்டி நிறுவன பங்குதாரரான முருகனை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார், மேலும் யார், யார் வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மதுரையில் இது போன்று தொடர்ச்சியாக 3 நாட்களுக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

அதேபோல, கே.கே.நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் முருகவேலுக்கு சொந்தமான ஆர்.ஆர்.கட்டுமான நிறுவனத்திலும் இந்த சோதனை நேற்று 3-வது நாளாளக நீடித்தது. அரசு ஒப்பந்த பணிகளுக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சோதனை எப்போது முடியும் என்பது தெரியாத நிலையில் மதுரையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story