காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வருமானவரி சோதனை


காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வருமானவரி சோதனை
x

காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் பேரில் கடைக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னையில் பாண்டி பஜார் பகுதியில் காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் பட்டுப்புடவைக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் காஞ்சீபுரம், சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு பிராண்ட் பெயர்களில் பிரத்யேக புடவைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த துணிக் கடையின் தலைமை அலுவலகம் காஞ்சீபுரத்தில் உள்ளது.

இங்கு கடந்த சில மாதங்களாக பட்டுப்புடவைகள் மற்றும் துணிகள் விற்பனை செய்ததில் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக இந்நிறுவனத்தின் மீது வருமானவரித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதனடிப்படையில் கடந்த சில மாதங்களாகவே வருமானவரித்துறையினர் இந்த கடைகளின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.

பட்டுப்புடவை விற்பனையில் மோசடி

இந்தநிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் வீதம் பல்வேறு குழுக்களாக பிரிந்து நேற்று காலை திடீர் என்று கடைக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொள்முதல் செய்யப்பட்ட புடவைகள், விற்பனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் வருமானவரி துறையினர் கைபற்றி விசாரித்து வருகின்றனர். அத்துடன், பட்டுப்புடவை விற்பனையில் மோசடி செய்ததும் தெரியவந்ததுள்ளது.

அதேபோல், துணிக்கடைக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. குறிப்பாக இந்த கடையின் மூலம் பட்டுப் புடவை வாங்கி விற்பனை செய்யும் டீலர்களின் அலுவலகங்கள், குடோன்கள் உள்பட தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் பறிமுதல்

சோதனை நடந்தபோது துணிக்கடைக்கு எவரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கடையில் இருந்தும் எவரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வருமானவரி சோதனை தேவைப்பட்டால் ஓரிரு நாட்கள் தொடர வாய்ப்பு உள்ளது. எனவே சோதனை முடிந்த பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு மற்றும் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும். ஐதராபாத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் இந்த துணிக்கடையின் உரிமையாளர் கோபிநாத், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் என்று வருமானவரித்துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story