தொடர்கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு-ஜலகம்பாறையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
தமிழக எல்லை மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது,.
வாணியம்பாடி
தமிழக எல்லை மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது,.
கனமழை
தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் உள்ள குப்பம், மல்லானூர், பெரும்பள்ளம், தேவராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழக பகுதிகளான புல்லூர், திம்மாம்பேட்டை, நாராயணபுரம், ஜவ்வாது ராமசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் புல்லூர் தடுப்பணையில் அதிக அளவில் தண்ணீர் வெளியேறி ஆவாரங்குப்பம் பாலாற்றின் வழியாக அம்பலூர் நோக்கி வந்து கொண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தங்கி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஜலகம்பாறை
திருப்பத்தூரில் நேற்று முன்தினம் 2 மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில் நேற்றும் காலை 10 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்தது.
அதன் காரணமாக திருப்பத்தூரில் உள்ள அனைத்து தெருக்களிலும் மழை நீர் தேங்கி நிற்கிறது. திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்
திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தொடர் மழை காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது, இதேபோன்று ஆண்டியப்பனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு; ஆம்பூர்- 5, ஆம்பூர் சர்க்கரை ஆலை-6, ஆலங்காயம்- 20, வாணியம்பாடி- 28, நாட்டறம்பள்ளி- 28, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை-23, திருப்பத்தூர்- 102.60.