பாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கலெக்டர் கார்மேகம் தகவல்
பாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார்.
சேலம்:
பாரம்பரிய நெல் விதை விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறியுள்ளார்.
பாரம்பரிய நெல் விதை
சேலம் கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்க உள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
உறுதி செய்ய வேண்டும்
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும். அவைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.