விளையாட்டு மைதானம் திறப்புவிழா
திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி மைதானம் திறப்பு விழா நடந்தது
திண்டுக்கல் எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி மைதானம் புதுப்பிப்பு மற்றும் கூடைப்பந்து மைதானம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதையொட்டி பணிகள் முடிவடைந்தநிலையில் நேற்று மைதானம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு எம்.எஸ்.பி. மேல்நிலைப்பள்ளி ஆட்சிக்குழு தலைவர் மதிச்செல்வன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் முருகேசன் வரவேற்று பேசினார். இதில் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல செயலாளர் ஜெபானந்த் ஜூலியஸ் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மைதானத்தை ரிப்பன் வெட்டி, திறந்து வைத்து பேசினர்.
அதைத்தொடர்ந்து மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், மதுரை, கோவை, சிவகங்கை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 20 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடக்கிறது. போட்டிக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் வர்த்தகர் சங்க துணைத்தலைவர் ஜி.சுந்தரராஜன் பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தார். தொழிலதிபர் எஸ்.கே.சி.குப்புசாமி, திண்டுக்கல் நாடார் உறவின்முறை தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாவது போட்டியில் திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி-மதுரை பிரிட்டோ பள்ளி அணிகள் மோதின. தொடர்ந்து போட்டிகள் நடந்து வருகிறது. வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சியில் கூடைப்பந்து கழக தலைவர் செண்பகமூர்த்தி, கால்பந்தாட்ட கழக செயலாளர் சண்முகம், விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமாமேரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.