பேரம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட துணைவேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழா
பேரம்பாக்கம், கனகம்மாசத்திரம், பட்டரைப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையத்தை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.
வேளாண் விரிவாக்க மையங்கள்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பேரம்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர், கனகம்மாசத்திரம் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.38 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் 3 துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்க்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழக பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதியதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்கம் மைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து அவர் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக 40 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், தி.மு.க மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், மாவட்ட அவை தலைவர் திராவிடபக்தன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம்பிரகாஷ், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சுபப்பிரியா சக்திதாசன், குலாபி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.