கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையம் திறப்பு
திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டது.
கண்காணிப்பு மையம்
திருவாரூர் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் கூறியதாவது.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டு (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 13,549 கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கின்றனர். இவர்களில் 6275 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது.
மருத்துவ அறிவுரை
மீதம் உள்ளவர்களில் 6653 கர்ப்பிணி தாய்மார்கள் மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவில் இருக்கின்றனர். இவர்கள் தினந்தோறும் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.
இந்த மையத்தில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களை அவர்களின் அலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவ அறிவுரை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடல்நலம் விசாரித்து அதற்கு தகுந்த வகையில் அறிவுரை வழங்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் தாய்மார்களுக்கு திடீர் பாதிப்போ அல்லது சுனக்கமோ ஏற்பட்டால் அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரபணிகள் இணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி, உதவி கலெக்டர் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி) ஆகியோர் உடனிருந்தனர்.